திருவாட்டி தமிழ்வாணி முத்து
மூத்த சிறப்பாய்வாளர்
தமிழ்மொழிப் பகுதி
பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு
கல்வி அமைச்சு
திருமதி அருள்மதி இலெனின்
பாடக்கலைத்திட்ட வளமேம்பாட்டு அதிகாரி
தமிழ்மொழிப் பகுதி
பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு
கல்வி அமைச்சு
தன்விவரம்
தமிழ்மொழிப் பாட நூலாக்கக் குழு கல்வியமைச்சின் தாய்மொழிகள் துறையின் தமிழ்மொழிப் பகுதியில் இயங்குகிறது.
திருவாட்டி தமிழ்வாணி முத்து அவர்கள் தமிழ்மொழிப் பகுதியில் மூத்த சிறப்பாய்வாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் தொடக்கப்பள்ளிகளுக்குரிய 2015 பாடத்திட்டத்தையும் அதன்தொடர்பான பயிற்றுவளங்களையும் வடிவமைக்கும் குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தியதோடு 2024 பாடத்திட்டத்தையும் அதன்தொடர்பான பயிற்றுவளங்களையும் வடிவமைக்கும் குழுவையும் வழிநடத்தி வருகிறார். தொடக்கப்பள்ளிகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்குத் தேவைப்படும் பாடநூல்கள், பயிற்சிநூல்கள், துணைவளங்கள், மின்னிலக்க வளங்கள் முதலியவற்றை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்புடைய வகையில் வடிவமைக்கும் பணியில் திருவாட்டி தமிழ்வாணியுடன் இணைந்து திருமதி அருள்மதி இலெனின் அவர்களும் ஈடுபட்டுள்ளார். இவர் கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பகுதியில் பாடக்கலைத்திட்ட வளமேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.
பாடநூலாக்கக்குழு தமிழ்மொழியைக் கற்கும் மாணவர்களின் வேறுபட்ட கற்றல் தேவைகளை நிறைவுசெய்வதற்கு ஏற்ற கற்றல் அனுபவங்களை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இப்பாட நூலாக்கக் குழுவைச் சேர்ந்த சிறப்பாய்வாளரும் பாடக்கலைத்திட்ட வளமேம்பாட்டு அதிகாரியும் இப்பகிர்வின்போது இவ்வளங்கள் குறித்தும் அவற்றின் பயன், பயன்பாடு முதலியவை குறித்தும் பகிர்ந்துகொள்வர்.
Profile
The Tamil Language Primary Instructional Materials Development Team in the Mother Tongue Languages Branch is responsible for developing the Tamil language curriculum and resources for primary level education. Their focus is on creating engaging materials that cater to diverse learning needs and facilitate joyful learning experiences. Representatives from the team will present these materials and their impact on students' learning.
சுருக்கவுரை
இவ்வாண்டு தொடக்கப்பள்ளியில் மேம்பட்ட பயிற்றுவளங்கள் அறிமுகங்கண்டுள்ளன. இப்பயிற்றுவளங்களுக்கு ‘இன்பத்தமிழ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்மொழியை மகிழ்வுறக் கற்க இப்பயிற்றுவளங்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைத் தமிழ்மொழிப் பகுதியின் அதிகாரிகள் இப்பயிலரங்கில் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தமிழ்மொழிக் கற்றலுக்குப் பயிற்றுவளங்களைக்கொண்டு எவ்வாறு வலு சேர்க்கலாம் என்பதைக் குறித்து இப்பகிர்வில் அறிந்துகொள்ளலாம்.
இப்பகிர்வில், உரையாடல்வழிப் படித்தல் உத்திமுறையைப் பயன்படுத்திப் பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்குக் கதைகள் படிக்கலாம் என்பதை அறிந்துகொள்வர். பிள்ளைகளுடன் இணைந்து கதை படிக்கும் நேரத்தில் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடும் விதம்பற்றியும் கதையைப் படிக்கும்போது எத்தகைய வினாக்களைக் கேட்டுக் கலந்துரையாடலாம் என்பதுபற்றியும் தமிழில் பிள்ளைகள் பேசுவதை ஊக்குவிக்கும் விதம்பற்றியும் அறிந்துகொள்வர். மேலும், பிள்ளைகளை ஈர்க்கும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இருவழித் தொடர்பு மின்னூல்கள்பற்றியும் அவை மொழியைக் கைவரப்பெறுவதில் பிள்ளைகளுக்கு உதவும் விதம்பற்றியும் அறிந்துகொள்வர்.
இப்பகிர்வில், பிள்ளைகளின் பேச்சுத்தமிழை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பேசுதல் ஒளிக்காட்சிகளைப்பற்றியும் பெற்றோர்கள் அறிந்துகொள்வர். இந்த ஒளிக்காட்சிகளைப் பயன்படுத்திப் பிள்ளைகளின் பேசுதல் திறனை வளர்ப்பதற்குரிய உத்திகளும் பகிர்ந்துகொள்ளப்படும். இந்த ஒளிக்காட்சிகள் அன்றாட வாழ்க்கையில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சூழல்களாக இருப்பதால் இச்சூழல்களைப் பயன்படுத்திப் பேச்சுத்தமிழை வாழ்க்கையோடு ஒருங்கிணைக்கும் விதம்பற்றியும் பெற்றோர்கள் தெரிந்துகொள்வர்.
Synopsis
This session aims to introduce parents to the new Tamil Language curriculum and Inbathamizh instructional materials which empower them to create a supportive language environment at home. It will demonstrate dialogic reading strategies, open-ended questioning, the use of e-books and Tamil oracy videos to enhance children's language skills.